ஏகாதசி விரதம் இருப்பது எப்படி ?
Ekadasi
ஏகாதசி
ஏகாதசி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரியமான நாளாகும்.ஏகாதசி அன்று விரதம் இருப்பதன் மூலம் நாமும், நமது குடும்பத்தினரும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளை பெறலாம்.
மருத்துவரீதியாக,மாதம் இருமுறை வரும் ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும், மன நலத்திற்கும் உதவும்.
ஏகாதசி விரதம் இருப்பதை எல்லா சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன. ஏகாதசி விரதம் இருப்பதால் மற்றெல்லா விரதங்களின் பலனையும் அடையலாம். ஆனால் மற்றெல்லா விரதங்களை கடைபிடித்தாலும் ஏகாதசி விரதத்தின் பலனை அடைய இயலாது. மேலும் ஏகாதசி விரதத்தினை கடைபிடிக்காமல் தானிய உணவினை உண்பது, பாவங்கள் செய்த கர்மத்தை உண்டாக்கும். எனவே தான் ஏகாதசி அன்று குறிப்பாக தானிய உணவு வகைகள் தவிர்க்கப்படுகின்றன.
ஏகாதசி என்றால் என்ன?
சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள். இங்கு ஏகாதசி என்பது அமாவாசை யிலிருந்து 11வது நாளையும், பௌர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும். இந்த இரண்டு நாள்களிலும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
ஏகாதசி விரதம் இருப்பது எவ்வாறு?
ஏகாதசி விரதத்தின் மிக முக்கியமான அங்கம் தானியங்களால் ஆன உணவை எவ்வகையிலும் உண்ணாமல் இருப்பதேயாகும்.
குறிப்பாக அரிசி, சாதம் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற தானிய வகை களால் செய்யப்பட்ட பலகாரங்களை உண்பதும் ஏகாதசி விரதத்தை முறிக்கும்.
நவ தானியங்களால் செய்யப்பட்ட உணவு களும், பருப்பு வகைகளும், பயறு வகைகளும் (கடுகு உளுந்தம் பருப்பு தாளித்துக் கொட்டுதல் உட்பட) ஏகாதசி அன்று முற்றிலும் விலக்கப்பட வேண்டும்.
காய்கறிகளில் மொச்சை, பீன்ஸ், அவரை போன்ற பயறு வகைகளைச் சேர்ந்த காய்களும் விலக்கப்பட வேண்டும்.
சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான பசு நெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்றெல்லா எண்ணெய் வகைகளும் விலக்கப்பட வேண்டும். இத்தனை கவனம் தேவைப்படுவதால் முதல் தர பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் (நிர்ஜல ஏகாதசி) ஏகாதசி விரதம் கடைபிடிப்பார்கள். அது முடியாதவர்கள் துளசி தீர்த்தம் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் பசும்பால், தயிர், பழங்கள் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் சமைத்த காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வர்.
ஏகாதசி விரதம் ஆரம்பிப்பதும், முடிப்பதும் எவ்வாறு?
ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை சூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம் ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை சூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம்
அதே போல் ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டிகளில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர் கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தம் உட்கொண்டும், மற்றவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நைவேத்தியமாக செய்யப்பட்ட தானிய உணவை உட்கொள்வதுமாகும்.
ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பது எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அடுத்த நாள் துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பதாகும்.
ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி நாள் மற்றும் விரதம் முடிக்க வேண்டிய நேரம் குறித்த காலண்டர் இஸ்கான் கோயில்களில் கிடைக்கும்.
ஏகாதசி அன்று செய்ய வேண்டியதும்,
செய்யக் கூடாததும் என்ன?
ஏகாதசி முழுவதும் பகவானின் நாமம் சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரக மந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே” எனும் மஹாமந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பது மிகவும் சிறந்தது. ஏகாதசி அன்று அவசியம் கோயிலுக்குச் சென்று ஸ்ரீகிருஷ்ணரை தரிசிக்க வேண்டும். ஸ்ரீமத்பாகவதம், பகவத் கீதை நூல்களை படிப்பதும், கேட்பதும் மிகவும் நல்லது.
ஏகாதசி அன்று சினிமா செல்வதோ, பரமபதம் ஆடுவதோ, வீண் பேச்சுக்களில் காலத்தை விரயம் செய்வதோ அல்லது வீணாகப்படுத்துத் தூங்குவதோ விரதத்திற்கு சற்றும் உதவாது. தவிர, திருமணம் போன்ற உலக காரியங்களை ஏகாதசி அன்று தவிர்ப்பது நல்லது.
பாவங்களை நீக்கும்
முறைப்படி இருக்கும் ஏகாதசி விரதம் ஒருவரை பாவங்களிலிருந்து விடுவிப்பதுடன் விரதம் இருப்பவர்களின் மூதாதையர்களையும் நற்கதி அடையச் செய்யும்.
ஏகாதசியும், கீதையும்
ஏகாதசி அன்று பகவத்கீதையை பாராயணம் செய்வது, கீதை உரையை கேட்பது இவை மிகவும் சிறந்தது. தவிர பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நெய் தீப ஆரத்தி காட்டுவதும், ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபம் செய்வதும் நல்லது.
ஏகாதசி விரதம் அன்று சாப்பிடக் கூடிய உணவுகள்:
- கொய்யாப் பழம், மாதுளம் பழம், ஆப்பிள் பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, பப்பாளிப் பழம், வெள்ளரிப் பழம், வெள்ளரி பிஞ்சு, வெள்ளரிக்காய், நவாப் பழம்.
- அவித்த கடலை, மரவல்லி கிழங்கு, சர்க்கரைவல்லி கிழங்கு, உருளைக் கிழங்கு, சிறுகிழங்கு, பனங்கிழங்கு (இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு)
- கேரட், முட்டைக்கோஸ், வெண்டைக்காய், கத்தரிக்காய், தடியங்காய், பூசணிக்காய், நாட்டு சுரக்காய், பீக்கங்காய் போன்ற காய்கறிகளை பயன்படுத்தி பொறியல், கூட்டு, சூப் தயார் செய்யலாம்.
- இளநீர், தேங்காய், பசும் பால், பசுந்தயிர், மோர் எடுத்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்:
மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா பழம் இவற்றை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
குறிப்பு: - மேற்கூறிய பொருட்களை ஏகாதசி அன்று அனைவரும் உட்கொள்ளலாம்.
- மேற்கூறிய பொருட்களை வீட்டிலேயே சமைத்து நைவேத்யம் செய்து பிரசாதமாக உண்ணவும். கடையில் விற்கப்படும் சமைத்த, வறுத்த, அவித்த உணவுகளை உண்ணாதீர்கள்.
- ஏகாதசி அன்று தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவும்.
* ஏகாதசி வீடியோ லிங்க்:*
https://youtu.be/mpOGNVFmQEU
ஏதேனும் சந்தேகங்களுக்கு 7217216001 என்ற எண்ணில் போன் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.
– ISKCON Madurai, Tirunelveli & Periyakulam.
Phone / Whatsapp: 721 721 6001